திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சீதாலட்சுமி ராமஸ்வாமி, கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு திருக்குறள் இசை உலக சாதனை நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அல்லி அவர்கள் பத்மபூஷன் ராமஸ்வாமி அவர்களின் கல்வி சேவையினை போற்றியும், அறப்பணி செம்மல் செயலர் அவர்களின் கல்விப் பணியினை புகழ்ந்தும் திருக்குறளின் தனி சிறப்பினை எடுத்துக் கூறியும் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் இசை துறை மற்றும் வ்ருஷா உலக சாதனை புத்தகம் இணைந்து உலக அமைதிக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி உருது தனலட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் விஜய சுந்தரி அவர்கள் திருக்குறளின் மேன்மையினையும் உயர் தனி சிறப்பினையும் அழகு தமிழில் மாணவியர் மனம் மகிழ்கின்ற வகையில் சுவைப்பட எடுத்துரைத்தார் அதனைத் தொடர்ந்து சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவர் முனைவர் செல்வி குரல் காட்டும் வாழ்வியலை அழகுற எடுத்துரைத்தார்.
உலக பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள கடவுள் வாழ்த்து, அன்புடமை, இனியவை கூறல், ஈகை, வாய்மை, மெய்யுணர்தல், அவா அறுத்தல், துறவு ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள 75 திருக்குறட்பாக்களை இசைத்துறை தலைவர் முனைவர் லலிதாம்பாள் அவர்கள் பிரத்தியேகமாக இசையமைத்து பாட பேராசிரியர் பெருமக்கள் அலுவலர்கள் மாணவியர்கள் என மூவாயிரத்து நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து ராகத்தோடு இசைத்து உலக அமைதி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவாக சுயநதிப் பிரிவு பொறுப்பாளர் முனைவர் சாந்தி நன்றியுரை ஆற்றினார்.