திருச்சி அல்லித்துறை பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முன்பு தன்னிச்சையாக செயல்படும் பரம்பரை அறங்காவலரை கண்டித்து 15 அடிமனை வாடகைதாரர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப சின்னதுரை தலைமை தாங்கினார்.

திருச்சி அல்லித்துறை அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான அடி மனையில் வாடகைதாரர்கள் தங்களின் சொந்த செலவில் கடையை கட்டி இவர்கள் பெயரில் மின் இணைப்பு பெற்று திருக்கோயிலுக்கு உரிய அடிமனை வாடகை செலுத்தியும், உள்ளாட்சி வரி செலுத்தி இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி இவர்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளனர்.‌ இந்த அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு பரம்பரை அறங்காவலர்கள் என 5 பேர் இருந்து வந்த நிலையில் இவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

இந்நிலையில் பரம்பரை அறங்காவலர் தண்டாயுத குப்தா என்பவரின் மகனான ராமகோடி குப்தா தான் மட்டும் தான் பரம்பரை அறங்காவலர் என்று கூறி வாடகைதாரர்கள் வழங்கிவந்த ரூ. 50 அடிமனை வாடகையை திடீரென மாதம் ரூபாய் 5000 என உயர்த்தி வாடகைதாரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.‌ இதுகுறித்து 2017 ஆம் ஆண்டு அரசு ஆணை என் 456 இன் படி நிர்ணயம் செய்த மாத வாடகையை இணை ஆணையரிடம் பேசி கடை ஒன்றுக்கு 1000 வீதம் 15 கடைகளுக்கு 15,000 ரூபாயை வாடகையாக பெற்றுவந்தார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி கடைகளுக்கு சீல் வைத்து விடுவதாக விளம்பர பலகையை கோயில் முன்பு வைத்ததை கண்டித்து அடிமனை வாடகைதாரர்கள் குடும்பத்துடன் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அறநிலையத்துறை ஆர்.ஐ உபகாரமேரி, ஆய்வாளர் பாஸ்கர், வி.ஓ உமாராணி மற்றும் போலீசார் உண்ணாவிரதமிருந்த அடிமனை வாடகைதாரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *