ரயில் நிலையங்களில் சட்டவிரோதமாக கடத்தல் பொருட்களை கடத்தி வருபவர்களை தடுத்தல், ஓடிப்போன குழந்தைகளை மீட்பது மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதற்காக “ஆப்ரேஷன் சட்டார்க்” என்ற பெயரில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அதனை தொடர்ந்து அவர் கொண்டு வந்திருந்த 2 பேக்குகளை சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீல் பிரிக்கப்படாத 41 மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச் சாராயம் 8 பாட்டில் இருப்பதை கண்டு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் மணி வயது 65 என்பதும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த 49 மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.