தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 6ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், அன்று முதல் பூத, கயிலாய, காமதேனு, சிம்ம, யானை, அன்னம், குதிரை ஆகிய வாகனங்களில் வெக்காளி அம்மன் வீதி உலா வந்தார். 9ம் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அம்மன் திருத்தேர் தொடங்கியது.அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மேலும், முக்கிய வீதிகள் வழியாக சென்ற திருத்தேர் மதியம்; நிலையை வந்து அடைந்தது. முன்னதாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர். தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை சார்பில் சிறப்பான வகையில் செய்திருந்தனர்.