திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காததை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை தீர்க்காததை கண்டித்தும், உர விலை உயர்வைதைப்போல் DPC-ல் நெல் விலை உயர்த்த கோரியும், மணப்பாறை பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் மும்முனை மின்சாரம் சரிவர கிடைக்காததை கண்டித்தும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது காவல்துறையினர் விவசாயிகளை தாக்கி, வலுகட்டாயமாகவும் குண்டுகட்டாகவும் கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் துடையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயியை தாக்கிய
கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் சிவராசிடம் புகார் மனுவை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு வழங்கினார்.