திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான இடம் பற்றாக்குறை காரணத்தினால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் 52 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று காலை கலையரங்கம் திருமண மண்டபத்தில் அதற்கான பணிகள் துவங்கியது. முதல் பணியாக படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆக்சிஜன் இணைப்புகள் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இங்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.