பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக சுவாமி, அம்பாள் திருமஞ்சன அபிஷேகத்திற்கு புனிதநீர் எடுத்து வருவது, உச்சிகால பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்சவங்களில் ஈடுபட்டு இறை பணியாற்றி வருகிறது. யானை அகிலா 24.5.2002-ல் அசாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 6 .12. 2011-ல் ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அகிலாவுக்கு கோவில் நந்தவனத்தில் நடைபாதை, நீச்சல் குளம் மற்றும் சேற்று மண்ணில் குளிப்பதற்காக 1200 சதுர அடியில் சேற்று குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகிலாவுக்கு நேற்று 20 தாவது பிறந்த நாள் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் காணப்பட்டது. மேலும் மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் அகிலாவிற்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. பின்னர் பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.