திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இந்நிலையில் அரியமங்கலம் ஒட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தெய்வானை வயது 69 என்பவருக்கு பயிர்க்கடன் 60,000 வழங்கக்கோரி அரியமங்கலம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு விண்ணப்பத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலம் ஆகியும் தற்போது வரை பயிர்கடன் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு விடம் அரியமங்கலம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கிறிஸ்டோபர் தனக்கு பயிர் கடன் வழங்க மறுப்பதாக அவர் மீது புகார் அளித்தார். புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டுறவு சங்க இணை பதிவாளரின் அரசு வாகனத்தின் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் படுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.