கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் உள்ளது ஆர்.டி.மலை, பாறைகிழம், அழகாபூர், கிராமனம்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஸ்ரீரங்கம் பெருமாளே குலதெய்வம். இதனால் இப்பகுதி மக்கள், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கரூரில் இருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்வது வழக்கம்.
இந்த வருடம், கரூரில் உள்ள நான்கு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் நள்ளிரவு புறப்பட்டு, இன்று காலை ஸ்ரீரங்கத்தை அடைந்தனர். ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தோப்பில் இன்று ஓய்வு எடுக்கும் கிராமத்து மக்கள், நாளை காலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று மொட்டை அடித்து, அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று ரெங்கநாதரை தரிசிப்பார்கள். அனைவரும் உண்டியல் காணிக்கை செலுத்திய பின்னர், சுமார் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் நடத்துவர். அதற்கு பிறகு நாளை இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை தங்களின் கிராமங்களை சென்றடைவார்கள்.
போக்குவரத்தில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட இந்த காலத்திலும், தங்களின் பாட்டன் முப்பாட்டன்களைப்போன்றே மாட்டு வண்டிகளில் சென்றுதான் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏற்படுத்தாமல் இன்னமும் மாட்டுவண்டிகளில் வந்து குலதெய்வத்தை வணங்கி செல்லும் இந்த வகை பக்தர்கள் ஒரு ஆச்சர்யம்தான்.