கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி முன்பு வந்தது. அப்போது அவர் கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், கோவில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்றும் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில். கடந்த 16ஆம் தேதி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஓரத்தூர் கிராமத் கோவில் திருவிழாவில் நேற்று இரவு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி போலீஸாரின் அனுமதியுடன் விடிய விடிய நடைபெற்றது. குறிப்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடையும் ஆனால் நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி நல்லிரவு 1.30 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி அவர்களின் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும்படி ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்திய கோவில் நிர்வாகிகள் மீதும், அனுமதி கொடுத்த கல்லக்குடி காவல் நிலைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.