திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இப் பிரசித்திப் பெற்ற இக் கோயில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, 700 ஆண்டுகள் பழமையானது. இக் கோயில் கும்பாபிஷேகம் செய்ய 33 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் கடந்தாண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டது. இத் திருப்பணிகளில் கோயில் உள் பிரகாரங்களில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டும், அனைத்து கோபுரங்களுக்கும் புதிய கலசம் பஞ்ச வர்ணம் தீட்டப்பட்டது.
இக் கோயிலின் கும்பாபிஷேக விழா 5 ம் தேதி காலை 7.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் தனபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 6 ம் தேதி காலை 7 மணிக்கு மேல் திசா ஹோமமும், 7 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வருதலும், 8 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், 96 வகை திரவிய ஹோமமும், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசால பூஜை ஆரம்பமும், காயத்திரி மந்திர ஹோமமும் இரவு 8 மணிக்கு மேல் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
9 ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பமும், காலை 9.15 மணிக்கு மகா பூர்ணாஹூதி , காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், காலை 10. 01 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், காலை 10.10 மணிக்கு ஆலயத்தில் உள்ள அனைத்து மூலவர் மகா கும்பாபிஷேகம் , தீபாராதணை ,கோ பூஜை நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை பூவாளூர் பி. கண்ணன் சிவாச்சாரியர் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹேமலதா, திருப்பணி குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் பொது மக்கள் செய்திருந்தனர்.