அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுக பிளவுப்பட்டு நிற்கிறது. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்து இருந்தனர். நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் அந்தத் திட்டம் வருகிற 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த களேபரத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெல்லமண்டி நடராஜன் இரட்டை தலைமையில் உறுதியாக நிற்பதால் மாநகர் மாவட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாக செயல்பட தொடங்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் வகையில் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த இரண்டாவது நாளாக பாலக்கரை பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில், கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடந்தது. இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.இந்த கூட்டத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி யால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும். தமிழக மக்களை காப்பாத்த முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.