தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் மிகவும் முக்கியமான சக்தி ஸ்தலமாக கருதப்படுவது திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகும்.
குறிப்பாக மாரியம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இன்று காலை திடீரென பால் வடிந்தது. இதனைக் கண்ட சில பக்தர்கள் வேப்ப மரத்தில் இருந்து வடியும் பாலை குடித்தும் பாட்டில்களில் பிடித்தும் செல்கின்றனர். மேலும் இதுகுறித்து அறிந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தும், மரத்திலிருந்து பால் வடியும் அதிசய காட்சியை பார்த்தும் செல்கின்றனர்.