சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5சதவீத ஜிஎஸ்டி வரியினை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இத்தகைய வரிவிதிப்பை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று அரிசி ஆலைகள் செயல்படாது என தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அரிசி ஆலைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 5மாநிலங்களில் மட்டுமே அரிசி அத்தியாவசிய உணவாக இருந்துவருகிறது. இந்நிலையில் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிபினால் அரிசி கிலோவுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையேற்றம் அதிகரிக்கும். இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். உணவுப்பொருள் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி அதனை அரிசி ஆலை நிர்வாகத்தினர் பின்பற்றி வரும்நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு அறிவிப்பு என்பது எங்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் மண்ணச்சநல்லூர் உள்பட 3ஆயிரம் அரிசி ஆலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு அளித்துள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.