திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி 50-வது வார்டு காஜா பேட்டை தண்ணீர் டேங்க் அருகே உள்ள சாக்கடையில் கழிவு நீர் மற்றும் சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட சில மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வசதியும் இல்லாமல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதுடன், நோய் தாக்கத்தால் இறக்கும் சம்பவங்களும் நேரிடுகின்றன.
தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் வேளையில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி இப்படி கழிவுநீர் சாக்கடையில் இறங்கி துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மீது நிர்வாகத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்றே கூற வேண்டும். குறிப்பாக துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்புக்காக கை உறை, பாதுகாப்பு காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ஆனால் அவைகள் பெயரளவுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் சாக்கடையில் உள்ள கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் கைகளாலேயே அள்ள வேண்டிய அவலம் உள்ளது. குடிசைப் பகுதிகளில் இந்த அவலம் அதிகம் உள்ளது.
கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றும் போது அவர்களுக்கு பல்வேறு நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் என்றால் அவர்களின் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம். மனிதக் கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் உள்ளது. குறிப்பாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கையுறை, காலனி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தினார்களா என்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அதிகாரிகள், இந்த வார்டின் பெண் கவுன்சிலர் மற்றும் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் இருப்பது வேதனையிலும் வேதனை என தெரிவித்தனர்.