திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வைஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சந்தோஷ் பள்ளி முடிந்ததும். தன்னை அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம் தகவல் ஏதும் சொல்லாமல் அருகில் உள்ள சிறுவனின் உறவினர் வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளான்.
இந்நிலையில் பள்ளிக்கு தாமதமாக வந்த சிறுவனின் தந்தை சிவா மற்றும் அவரது நண்பர் தாமரைக் கண்ணன் ஆகியோர் பள்ளியில் சிறுவன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பள்ளி முழுவதும் தேடியுள்ளனர். அதற்குள் மாணவனை காணவில்லை என்று தகவல் காட்டு தீ போல் அப்பகுதி முழுவதும் பரவியது. மேலும் சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி முன்பு கூடினர். எங்கும் தேடியும் கிடைக்காததால் பள்ளி நிர்வாகத்துடன் சிறுவனின் தந்தை மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென ஒரு கட்டத்தில் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் பள்ளி தாளாளர், மேலாளர், உடற்கல்வி ஆசிரியர், வாட்ச்மேன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் பள்ளியில் சேதத்தை ஏற்படுத்தியவர்களை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று விசாரணையில் ஈடுபட்டார் விசாரணையில் சிறுவனின் தந்தை தாமதமாக வந்ததால் சிறுவன் வீட்டிற்கு செல்லாமல் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதனைை அடுத்து பள்ளி மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைை எடுக்கக்கோரி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் மாணவனின் தந்தை சிவா அவரது நண்பர் தாமரைக்கண்ணன், சிவாவின் அண்ணன் பிரசன்னா உள்ளிட்ட 4- பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவனின் தந்தை சிவா இவரது நண்பர் தாமரைக்கண்ணன் ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.