திருச்சி பாரதியார் சாலையில் பகுதியில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் ஆர்சி மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தது அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆர்சி பள்ளியை சேர்ந்த மாணவர்களை பேருந்து நடத்துனர் ராமச்சந்திரன் பேருந்தில் ஏறுமாறு அழைத்தார்.
அதற்கு பள்ளி மாணவர்கள் நாங்கள் வேறு பேருந்தில் வருகிறோம் என கூறியதால் அரசு பேருந்தை ஓட்டுனர் மகேஷ் இயக்கினார். அரசு பேருந்து சிறிது தூரம் சென்றதும் ஆர்சி பள்ளி மாணவர்கள் ஓடிவந்து அரசு பேருந்தில் தொங்கியபடி ஏறினர். இதனைக் கண்ட நடத்துனர் ராமச்சந்திரன் மாணவர்களிடம் நின்று கொண்டிருந்த போது ஏறாமல் ஏன் இப்படி ஓடி வந்து ஏறுகிறீர்கள் இப்படி ஏறும் பொழுது யாராவது மாணவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டால் நாங்கள்தான் அரசுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
அதற்கு பள்ளி மாணவர்கள் நாங்கள் அப்படித்தான் ஓடி வந்து ஏறுவோம் எங்களிடம் பஸ் பாஸ் இருக்கிறது என்று திமிராக கூறியது மட்டுமின்றி நடத்துனர் ராமச்சந்திரன் மற்றும் ஓட்டுநர் மகேஷ் ஆகியோரை தவறான வார்த்தைகள் கூறி திட்டி உள்ளனர். இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை இயக்காமல் சாலையில் அப்படியே நிறுத்தி விட்டனர்.
மேலும் அந்த வழியாக வந்த அரசு பேருந்துகள் மற்றும் எதிர்சாலையில் வந்த அரசு பேருந்துகள் ஓட்டுநர் ஒன்று சேர்ந்து அரசு பேருந்துக்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஆதரவாக பயணிகளும் மாணவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலா மற்றும் போக்குவரத்து போலீசார் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை எடுக்குமாறு கூறினர்.
அப்போது பேருந்து ஓட்டுநர்கள் இது ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை ஆர் சி பள்ளி மாணவர்களால் இந்தப் பிரச்சனை அடிக்கடி நடைபெற்று வருகிறது என்று கூறினர். மேலும் சம்பந்தப்பட்ட ஆர்சி பள்ளி மாணவர்கள் மீது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவிப்பதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனார்கள் கூறிவிட்டு பேருந்தை எடுத்து சென்றனர். பள்ளி மாணவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேருந்தை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.