தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி கருமண்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழ்நாட்டு அரசியலை தலைகீழாக புரட்டி போட்ட மகான். வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காக போராடிய ஒரு போராளி. பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சட்டம் பிறப்பித்து தீர்வு கண்டது திமுக அரசு. மனிதனை மனிதன் சுமக்க கூடிய நிலையை ஒழித்தது, மனிதக் கழிவுகளை மனிதன் சுமந்ததை ஒழித்தது, குடிசைகளை மாற்றி கோபுர வீடுகளாக மாற்றியது, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு வழங்கியது, 17 வகையான அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு வாரியங்கள் அமைத்தது, அரவாணிகளுக்கு திருநங்கைகள் என பெயர் சூட்டியது என எண்ணற்ற பணிகளை செய்த ஒப்பற்ற மகான் கலைஞர் ஆவார். அவருடைய பேனாவை நினைவு சின்னமாக மெரினா கடற்கரையில் வைப்பதற்கு விமர்சனம் செய்து வருகின்றனர். இறந்தவரை பற்றி விமர்சிப்பது அரசியல் அநாகரீகம்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்கிற கோரிக்கையை கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சருக்கு வைத்திருக்கிறோம். அண்மைக்காலமாக கட்டுமான பொருட்களுடைய விலையை உற்பத்தியாளர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் உயர்த்தி இருக்கிறார்கள். இதனை தடுக்க நிரந்தரமாக செயல்படக்கூடிய விலை நிர்ணய குழு ஒன்று அமைத்திட வேண்டும் என்கிற கோரிக்கையும் முதலவரின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.