ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் ஒன்றியம் அதவத்தூரில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. குறிப்பாக மழை காலங்களில் சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் இருப்பதால் நெல் மூட்டைகள் பெருமளவில் சேதமடைந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அதவத்தூரில் 14 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் ரூபாய் 7 .11 கோடி மதிப்பிலான மேற்கூரை அமைப்பதற்கான கட்டுமான பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், மத்திய மாவட்ட பொருளாளர் வைரமணி, ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், அதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இருங்கலூரில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் ரூபாய் 4.63 கோடி மதிப்பிலான மேற்கூரை அமைப்பதற்கான கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.