75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் பிரண்ட்ஸ் பிளட் பேங்க் இணைந்து 28-வது ஆண்டாக திருச்சி பாலக்கரை அர்ரய்யான் மர்க்கஸ் அரங்கில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது . இந்த இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்றத் உறுப்பினருமான அப்துல் சமது கலந்துகொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் ஷபியுல்லாகான், கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சையது முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த ரத்ததான முகாமில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை சட்டமன்றத் உறுப்பினருமான அப்துல் சமது நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நமது இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கியும், அதேபோல் ரத்ததான முகாம், செடிகள், மரக்கன்றுகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி இந்த 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நேரத்தில் இந்திய சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் போராட்டம் நடத்தி இன்னுயிர் ஈந்து பல கோடி பொருளாதாரத்தை இழந்து நோக்கத்திற்காக இந்த விடுதலையை பெற்று தந்தார்களோ அந்த நோக்கத்தை பாதுகாப்போம், இந்த நாட்டை பன்முக தேசமாக, வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசமாக, மதசார்பற்ற தேசமாக, மத நல்லிணக்க தேசமாக மாற்ற நாம் அனைவரும் இந்த பவள விழா சுதந்திர தினத்தில் உறுதிமொழி ஏற்போம். குறிப்பாக தமிழகத்தின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும்பொழுது அவர் மீது காலணியை வீசிய சாம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழகத்தில் பாஜக கால் ஊன்றுவதற்காக வன்முறையை கையில் எடுத்து இருக்கிறது. மதுரையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு இது போன்ற வன்முறையை தூண்டக்கூடிய சக்திகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.