திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி நீண்ட நாட்களாக பொதுமக்கள் ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்த நிலையில்..,நேற்று நடந்த திருச்சி மாநகராட்சிய அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி கிளப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கபட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்ட ப்பட உள்ளது என்று மேயர் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்து சரி செய்வது, சாலை போக்குவரத்தை மாற்றுவது, புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைக்கப்பட உள்ள கடைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், எம்எல்ஏ பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.