தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு மாதம் 29ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப் 8-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
அதன்படி நேற்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு புனித கொடிமரத்தில் ஏற்றிவைக்கப்பட்டது. இந்த வேளாங்கண்ணி அன்னையின் கொடியினை காண அங்கு சுமார் பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அன்னையின் கொடி ஏற்றப்பட்டபோது பேராலையம் வண்ண விளக்குகளால் மிகவும் அழகாக ஜொலித்தது.