தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் முதன்மையான மருத்துவமனையாக திகழும் காவேரி மருத்துவமனையின் ஒரு அங்கமான திருச்சி காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் இருவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு புதிய செயல்முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த முதியவர்களில் 60 வயதை நெருங்கியவருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் இவருக்கு சுவாசிப்பதில் சிரம உருவானது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயச்சுவர் மற்றும் பெருந்தமணி வால்வில் கசிவு என இரு பிரச்சனைகள் அவருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் மேற்கண்ட பலூன் மூலம் விரிவாக்கக்கூடிய சிறப்பு சிகிச்சை இருதயவியல் நிபுணரான டாக்டர் சூரஜ் நரசிம்மன் தலைமையிலான குழு மேற்கொண்டது.
70 வயது நிரம்பிய இன்னொரு முதியவருக்கு சுவாசப் பிரச்சனை இருந்தது. அவரால் 100 மீட்டர் தூரம் கூட நடக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பெருந்தமணி வால்வு சுருங்கினால் உடலின் பிற பகுதிகளுக்கு குறைவான இரத்தமே செல்லும்.இவருக்கு அந்த பாதிப்பு இருந்தது. இதயத்தின் பம்பிங் செயல்பாடும் 15 சதவீதமாக குறைந்திருந்தது. சிகிச்சை தொடர்பாக மருத்துவமனையின் செயல் இயக்குனர் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.செந்தில்குமார் கூறும் போது, இதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் வால்வு சரி செய்யப்படும் அல்லது வால்வு மாற்றப்படும். இந்த புதிய முறை மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஒரு வா ல்வை பொறுத்த முடியும். காலின் ரத்த நாளங்களில் சிறிய துளைகள் இட்டு அவற்றின் வழியாக உட் செலுத்தப்படும் குழாய்களை பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வினை பொருத்துவது இந்த செயல்முறை ஆகும். 65 வயதுக்கு மேற்பட்ட வயதான நபர்களுக்கு மற்றும் பிற உறுப்புகளில் பிரச்சனை இருக்கின்ற நபர்களுக்கு இந்த வழிமுறை அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்று அறுவை சிகிச்சை முடிவடைந்து 6மணி நேரங்களுக்கு பிறகு நோயாளிகளால் எழுந்து நடமாட இயலும். வழக்கமான செயல்பாடுகளை செய்வதற்கான திறனை பெற்றிருப்பார்கள். இந்த சிகிச்சை முறைக்காக டாக்டர் சூரஜ் நரசிம்மன் ஹங்கேரியில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.