திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நின்ற இடத்திலேயே அமர்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 62 வயதான ஜமீலா பெண் யானை நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அலர்ஜி காரணமாக யானையின் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புண்ணானது யானையின் தும்பிக்கை மற்றும் கால்களுக்கு பரவியது. இதனால் உடலில் சீல் வைக்கப்பட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி உத்தரவின்பேரில் கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் உடல்நிலை மிக மோசமானதை தொடர்ந்து ஜமீலா யானை நின்ற இடத்திலேயே அமர்ந்தவாறு தனது உயிரிழந்தது. உயிரிழந்த ஜமீலா யானையின் உடல் நாளை திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், துணை அதிகாரி சம்பத்குமார் முன்னிலையில் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர். வன பகுதியில் ஜமீலா பெண் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜூலை மாதம் 26 வயதான ரோகிணி எனும் பெண் யானை உடல்நல குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.