மனு தர்மத்தில் இருக்கும் கருத்துக்கள் குறித்து தி.மு.க வின் துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா பேசியவை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மனு தர்மம் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதால் தான் தொடர்ந்து அதனால் சர்ச்சை நிலவுகிறது. மேலும் அதில் சூத்திரர்கள் அனைவரும் விபச்சாரியின் மகன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சர்ச்சையான அந்த மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அதன் மாநில பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் நமது நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பிறப்பால் சூத்திரர்கள் என்று மனுதர்மம் புத்தகம் அத்தியாயம் 8 ஸ்லோகம் 415ல் கூறப்பட்டுள்ளது. சூத்திரர்கள் இயல்பு குறித்து இந்துமத புத்தகமான மனுதர்மத்தில் விளக்கப்பட்டுள்ளது. மனு தர்மப்படி போரில் தப்பி ஓடியவர், போரில் பிடிபட்டவர், பக்தியுடன் பிராமணர்களுக்கு சேவை செய்பவர், விபச்சாரியின் மகன், ஒருவரால் வழங்கப்பட்டது, தலைமுறை தலைமுறையாக சேவை செய்பவர் என ஏழு வகையான சூத்திரர்கள் உள்ளனர். மேற்குறிப்பிட்ட காரணங்கள் இயற்கைக்கு மாறான நம் மக்களுக்கு எதிரான நீதியாகும். எனவே பெரும்பான்மையான மக்களை விபச்சாரியின் மகன் என்று இழிவுபடுத்தும் மனுதர்மத்தை ஒன்றிய அரசு தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.