தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5 வாலிபர்கள் 2 அடி உயரமுள்ள பட்டாக்கத்தியை கையில் ஏந்தியபடி சாலையில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேல உளூரை சேர்ந்த சகோதரர்கள் முகேஷ்குமார், சந்தோஷ்குமார், இவர்களின் நண்பர்களான முருகானந்தம், கபிலன் ஆகிய நான்கு பேரும் தஞ்சை – ஒரத்தநாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் செல்லும் வாகனங்களை மிரட்டுவது போலவும், அதேபோன்று மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து வண்டியை நிறுத்தி அதில் இருந்து இறங்கிய வாலிபர் பட்டாக் கத்தியை உருவி நண்பரிடம் கொடுப்பது போலவும், அவர் அதை வாங்கி வாயில் வைத்தபடி வேட்டியை மடித்துக் கட்டுவதுபோல் வீடியோ பதிவு செய்தனர்.ஆனால் இந்த வாலிபர்களுக்கு மட்டும் தான் தெரியும், இது வீடியோ பதிவு என்று ஆனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இளைஞர்கள் ஊரடங்கில் வழிகளில் ஈடுபடுவது போல் பயந்து அங்கிருந்து பெண்கள் தங்களது நகைகளை பிடித்தபடியும், ஆண்கள் பதறியடித்துக் கொண்டும் ஓடினர். இந்நிலையில் இளைஞர்கள் இந்த வீடியோ பதிவை அவர்களின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் இந்த இளைஞர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . இதனையடுத்து , இந்த விவகாரம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலைய போலீசார் முகேஷ்குமார் , சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இளைஞர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த காலத்து வாலிபர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்கின்றனர்.