திருச்சி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பாக சங்க தலைவர் செளந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:
திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள் புகார் தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் நீதிமன்ற வளாகத்தினுள் செயல்பட்டு வந்த பத்திரங்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையானது நீதிமன்றத்திற்கு வெளியே தற்காலிகமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா முடிந்தும் அந்த கீற்றுக் கொட்டகை அகற்றப்படாமல் நீதிமன்றத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் முன்புறம் உள்ள பத்திரம் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை செய்யும் நிலையங்கள் செயல்படுவதாக திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தும் 4 மாதகாலம் ஆகியும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் அந்த கீற்றுக் கொட்டகையில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் மேலும் பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேலும் நீதிமன்றத்திற்கு வரும் நீதிபதிகள் மற்றும் வழக்காடிகள், பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் உள்ள கீற்று கொட்டகையினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்,
மேலும் நீதி மன்றம் சாலைகளை சீரமைக்க வேண்டும் அதேநேரம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட தபால் நிலையத்தையும் மீண்டும் வழக்கறிஞர்கள் நலன்கருதி உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இந்த பேட்டியின் போது செயலாளர் மதியழகன், துணை தலைவர் ராஜேஷ்கண்ணா, இணைச் செயலாளர் ஆரோக்கிய தாஸ், பொருளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.