வெளிநாடான கம்போடியாவில் நல்ல வேலை எனக்கூறி வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்று அங்கு கொடுமைப் படுத்தப்பட்டு 1000 டாலருக்கு விற்கப்பட்டு சிக்கித் தவித்த வரை மாவட்ட நிர்வாகமும் எஸ்டிபிஐ கட்சியினரும் பத்திரமாக மீட்டு சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து வாலிபர் இப்ராஹிம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரின் மகன் இப்ராஹிம் பி.டெக் பட்டதாரியான நான் கடந்த ஜூலை மாதம் கம்போடியாவில் ஆன்லைன் வேலை இருப்பதாக தெரிந்து திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஏஜென்ட் மூலமாக 3 லட்சம் கொடுத்து கம்போடியாவிற்கு வேலைக்கு சென்றேன்.
இந்நிலையில் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ஒரு குறிப்பிட்ட நாட்டை தேர்ந்தெடுத்து அந்த நாட்டில் ஆன்லைன் மூலம் ஒருசில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் மோசடி செய்ய வேண்டும் என கூறி வற்புறுத்தினர். மேலும் மோசடி செய்ய மறுக்கும் நபர்களுக்கு சாப்பாடு தராமல், கரண்ட் ஷாக் கொடுத்தும், பிரம்பால் அடித்தும், சிறிய தனி அறையில் அடைத்தும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதுகுறித்து எஸ் டி பி ஐ மூலமாக திருச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலமாக கம்போடியாவில் சிக்கித் தவித்த என்னை பத்திரமாக மீட்டுள்ளனர்.
குறிப்பாக கம்போடியாவிற்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் ஏஜெண்டடின் மூலம் மறைமுகமாக அங்கு 4000 டாலருக்கு விற்கப்படுகின்றனர். என்னை போல 400-க்கும் மேற்பட்டோர் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்து வருகின்றனர் அவர்களையும் இந்திய தூதரகமும் மாநில அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் எனவும் அதேபோல் வெளிநாட்டிற்கு வாலிபர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகளை காவல்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கம்போடியாவில் சிக்கித் தவித்த வாலிபர் இப்ராஹீமை திருச்சி மண்டல தலைவர் ஷஸ்ஷான், மாவட்டத் தலைவர் முபாரக் அலி பொதுச் செயலாளர் தமிம் அன்சாரி ஆகியோர் வரவேற்றனர்.