தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாநில பொருளாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநில துணை தலைவர் ஜெயசந்திரராஜா, மாநில செயலர் மகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கிடையே சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
தமிழக அரசுத் துறைகளில் உள்ள 7 லட்சம் பணியாளா்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தற்காலிகம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்களாக உள்ளனா். அரசுத் துறைகளில் உள்ள 5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த ஊதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாதவா்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசு அகவிலைப்படி உயா்வை வழங்கிட வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் வரும் நவ. 19, 20 -களில் நடத்தப்படும் மாநாட்டின் முதல் நாளில் பிரதிநிதிகள் மாநாடும், மறுநாள் பேரணி மற்றும் பொது மாநாடும் நடைபெறும். மேலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியா் சரவணனின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 4 ஆம் தேதி கடலூா் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.