திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை பராமரிப்பு பணிக்காக பொன்மலை ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்வது வழக்கம். அதன் படி இன்று மதியம் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை இன்ஜின் மூலம் பராமரிப்பு பணிக்காக கொண்டு சென்ற பொழுது திடீரென இரண்டு ரயில் பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டது.
மேலும் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் தண்டவாள வழித்தடம் என்பதால் உடனடியாக ரயில்வே ஊழியர்கள் ரயில் சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்தில் வைத்து சரி செய்யும் பணியில் கடந்த இரண்டு மணி நேரமாக போராடி சரிசெய்தனர். தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்ட சம்பவத்தால் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் ரயில் கடந்த 1.30 மணி நேரம் தாமதமானது மேலும் திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றது. இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்தால் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பயணிகள் கடந்த இரண்டு மணி நேரமாக ரயிலுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.