திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு செங்குளம் காலனியில் குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 650க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவையான தண்ணீரை போர்வெல் மூலம் நீர்தொட்டிகளுக்கு ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்குவதில்லை. தண்ணீரை மக்கள் கீழிலிருந்து எடுத்து செல்லும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் தினமும் வழங்கப்படுவதில்லை. வாரத்திற்கு ஒருமுறை தான் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மற்றும் குடிசைமாற்றுவாரிய அதிகாரிகளிடம் கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை மனுக்கொடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இதனை கண்டித்தும், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். செங்குளம் காலனி முழுவதும் தேங்கி உள்ள மழைநீர், பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகள் ஆகியவற்றை அகற்றி சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும், தெருவிளக்கை சீரமைக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாதர் சங்க பகுதி தலைவர் சாந்தா, வாலிபர் சங்க கிளை தலைவர் சூர்யா ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பா.லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி, பகுதி தலைவர் ஷாஜகான், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ரேணுகா, மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் ராஹிலாபானு ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ரேவதி, நாகம்மாள், துர்கா, ஆஷா, மகாலட்சுமி, செந்தில், யுவராஜ், சபரி, பால அருண், ஆகாஷ், சரண்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு மாநகராட்சியின் துணை ஆணையர் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது இப்பேச்சு வார்த்தையில் மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட ஆவணம் செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது