திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் – ஜெர்மன் மேரி தம்பதியினர் இவரது மகள் பிலோசியா மேரி. ஆரோக்கியராஜ் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர்களது மகள் திருச்சி மொயின்கார்டு கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17, 18 ஆம் தேதி கண்வலி காரணமாக பள்ளிக்குச் செல்லவில்லை. மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியை கேத்தரின் மாணவியிடம் வீட்டுப்பாடம் செய்யாததால் கன்னத்திலும் காதிலும் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளியில் நடந்ததை மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார் உடனடியாக பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் தயாளன் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.காவல் ஆய்வாளரின் நடவடிக்கையை கண்டித்தும், மாணவியை தாக்கிய ஆசிரியை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று திருச்சி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மாணவியின் பெற்றோர் ஜெர்மன் மேரி மற்றும் அவரது உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கேகே நகர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாநகர காவல் ஆணையரிடம் தங்கள் மனுவை அளித்தனர். மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.