திருச்சி லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேந்தவர் தீபா இவரது கணவர் அருண்குமார் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 8- வயதில் நிரஞ்சன் என்ற மகனும் 6- மாத மிதுன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறு மாத குழந்தை மிதுனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது உடனடியாக தாய் தீபா குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இருதயத்தில் தமனிகள், சிரைகள் இடம்மாறியும், நல்ல ரத்தம் பாயும் பாதையில் கெட்ட ரத்தமும், கெட்ட ரத்தம் பாயும் பாதையில் நல்ல ரத்தமும் பாய்ந்து வருவதாகவும், மேலும் ரத்தக்குழாய் சுருங்கி, இருதயத்தில் 3 இடங்களில் ஓட்டைகள் இருப்பதையும் கண்டறிந்து தாய் தீபாவிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஒரு வார காலத்திற்குள் குழந்தை மிதுனுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், ஆபரேஷனுக்கு 8 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட தாய் தீபாவிற்கு தலை சுற்றியது ஏற்கனவே கணவனை இழந்து மாமியாரின் ஓய்வு பணத்தை கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தி வரும் சூழ்நிலையில் குழந்தையின் மருத்துவ செலவிற்கு என்ன செய்வது என்று அறியாது திகைத்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தன்னார்வளர்களிடம் உதவி கேட்டு வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு ஆறு மாத குழந்தையின் அறுவை சிகிச்சை உண்டான மருத்துவ செலவை அரசே ஏற்று குழந்தையின் உயிரை காப்பாற்ற கோரி தாய் தீபா கண்ணீருடன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.