சமூக நீதிப் பேரவை மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வடக்கு உக்கடை காயிதே மில்லத் சாலைக்கும் கல்லாகுத்துக்கும் இடையே பொதுமக்கள் கடந்து செல்வதற்காக உய்யகொண்டான் ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தீ விபத்து மற்றும் பொதுமக்களுக்கு உடல் நல குறைவு ஏற்படும் பொழுது தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.
இந்த பாலம் இங்கு வைக்கப்பட்டால் இந்தப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் மேலும் காய்தே மில்லத் சாலை மக்கள் உய்யக்கொண்டான் ஆற்றை கடக்கவும் அதேபோல எதிர் பகுதி மக்கள் இப்பகுதியில் ஆற்றைக் கடக்க மிகவும் எளிதாக அமையும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
குறிப்பாக சமூக நீதிப் பேரவை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூடிய விரைவில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் இப்பகுதிமக்கள் ஒன்றிணைந்து பாலத்தை தூக்கி வைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர்.