திருச்சி முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் நவாஸ் (வயது 47). கணினி அறிவியலில் பி.எச்.டி. முடித்துள்ள இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த அவர் கொரோனா வைரஸ் பிரச்சனையில் தாய்நாடு திரும்பினார். தற்போது திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். பின்னர் மீண்டும் வெளிநாடு செல்லும் ஆசையில் இணையதளங்களில் வேலைவாய்ப்பினை தேடி வந்தார்.இந்த நிலையில் ஒரு இணையதளத்தில் தனது பயோடேட்டாவை அனுப்பி வைத்தார்.அதைத்தொடர்ந்து மர்ம நபர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ரூ. 6 லட்சம் மாத சம்பளத்திற்கு பேராசிரியர் பணி இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அந்த நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பதிவு கட்டணம், என்.ஒ. சி. பணி நியமன செலவினம் என பல்வேறு காரணங்களை சொல்லி லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். பேராசிரியர் பிரேம் நவாசும் ரூ. 6 லட்சம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் மோசடி பேர்வழிகள் கூறியபடி ரூ. 23 லட்சத்தி 53 ஆயிரத்து 228 தொகையினை அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார்.ஆனால் மாதங்கள் உருண்டோடியும் அவருக்கு பணி நியமன ஆணை வந்து சேரவில்லை. பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேம் நவாஸ் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிவு செய்து பேராசிரியரை ஏமாற்றிய மோசடி பேர்வழிகளை தேடி வருகின்றனர்.