திருச்சி பீமா நகர் மாசிங் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் ஜன்னலில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது இதனைக் கண்ட பக்கத்து கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது மாடியில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் சென்டரில் தான் இந்த தீ வீபத்து ஏற்பட்டுள்ளது என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்தாலும், அவர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. காரணம் கம்ப்யூட்டர்கள் உதிரி பாகம் எரிந்து கொண்டிருந்ததால் அதிகளவு புகை வௌியேறியது. சிறிது நேரத்திற்கு வெண்ணிற புகையும், சிறிது நேரத்திற்கு கருநிற புகையும் மாறி மாறி வௌியேறியது.
இதனால் தீயை அணைப்பதற்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உயிர்சேதம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் தீயணைப்பு வீரர்கள் பொறுமையை கடைபிடித்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டும் தீயை முற்றிலுமாக அணைக்க முடியாமல் தீயணைப்புவீரர்கள் போராடினர். அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. பள்ளி விடும் நேரம் வந்ததை தொடர்ந்து போலீசார் உடனடியாக மேலப்புதுாரில் இருந்து பீமநகர் வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தையும் மேலப்புதுார் கீழ் பாலம் வழியாக அனுப்பி வைத்தனர்.
தீயை அணைக்கும் வீரர்களை விட, அப்பகுதியில் வேடிக்கை பார்க்க நிற்கும் பொதுமக்களை அனுப்பி வைத்து, தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்து சேர்வதற்காக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக பீமநகர் பகுதியில் மதியம் 2 மணி முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.