திருச்சி, அகதிகள் சிறப்பு முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 7 பேர் வெள்ளிக்கிழமை அவர்களது தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள, அகதிகள் சிறப்பு முகாமில், பயண ஆவண முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 160 பேர்கள் வரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் வங்க தேசத்தைச் சேர்ந்த 20 மேற்பட்ட்டோரும் அடக்கம். இவர்களில் ஆரிஃபுல்இஸ்லாம், முன்னாகான், ஹியூமன்கபீர், ஆரிஃபுல், டோபயேல், முகமது, மோக்ஷாத் ஆகிய 7 பேர் வழக்குகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களது தாயகம் அனுப்பிவைக்கும் ஆவனங்கள் தயார் செய்யப்பட்டு உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டன.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை திருச்சியிலிருந்து ரயில் மூலம் வங்க தேசத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் 7 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர். வங்கதேச எல்லையில் உள்ள நமது நாட்டு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூலம் வங்க தேசத்தைச் சேர்ந்த எல்லைபாதுகாப்பு அதிகாரிகள் வசம் அனைவரும் ஒப்படைக்கப் படுவர் என போலீசார் தெரிவித்தனர்.