தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா நடந்தது. இதில் செங்கரும்பை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க வலியுறுத்தியும், நிலுவைத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த தர்ணா போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மேகராஜன், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அய்யாக்கண்ணு கூறும் போது, செங்கரும்பை ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின்போது மாநில அரசு விவசாயிகளிடம் ஒரு கரும்புக்கு ரூ. 11 கொடுத்து வாங்கி இலவசமாக கொடுத்தது. அதனால் மாநில அரசை நம்பி இந்த ஆண்டு விவசாயிகள் இரண்டு மடங்கு கரும்பை சாகுபடி செய்தார்கள். இந்த ஆண்டு கரும்பை உங்கள் தொகுப்பில் சேர்க்காததை தொடர்ந்து ஒரு கரும்பை ரூ 5க்கு வாங்கி ரூ. 30 க்கு இடைத்தரகர்கள் விற்க முயற்சிக்கின்றனர்.
இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே செங்கரும்பை விவசாயிகளிடம் ரூ. 15க்கு கொள்முதல் செய்து சூப்பர் மார்க்கெட் கூட்டுறவு சொசைட்டி மூலமாக விற்பனை செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் இடுப்பில் பச்சை துண்டை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்ஒரு சிலர் சாலையில் படுத்து கரும்பை கையில் ஏந்தி கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது