அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தர உள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு விமானநிலையம் வரக்கூடிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அண்ணா விளையாட்டரங்கம் செல்லும் அவர், அங்கு 4,000 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி, கடன் உதவி வழங்குகிறார். ரூ.1200 கோடி மதிப்பில் திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியிலுள்ள டிஎன்பிஎல் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய காகித ஆலையை தொடங்கி வைக்கிறார்.. அங்கிருந்து திருச்சி திரும்பும் வழியில் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை அவரது வீட்டுக்கேச் சென்று சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்க உள்ளார். பின்னர் அங்கு நடைபெறக்கூடிய அரசு விழாவில் பங்கேற்று, சுகாதாரத்துறை சார்ந்த பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.
திருச்சியிலிருந்து மணப்பாறை வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழிநெடுகிலும் சுமார் 40 கி.மீ தொலைவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது என கூறினார்…இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, போட்டோ கமால், முத்துச்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்