திருச்சி மண்ணச்சநல்லூர் கோவத்தகுடி கிராமத்தில் கடந்த மாதம் மே 29ஆம் தேதி மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். இந்நிலையில் மே 31-ம் தேதி கோவத்தகுடி கிராமத்திலுள்ள 52 நபர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒருவாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட 11 நபர்களை திருச்சி துவாக்குடி என்ஐடி வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த ஜூன் 4- ம் தேதி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் எங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட வேறு எந்த கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், இங்கு எங்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் எங்களுக்கு கொரோனா நோய் தொற்று வந்ததாக தவறான அறிக்கையை தந்துள்ளதாகவும், மேலும் வலுக்கட்டாயமாக சிறப்புமுகாமில் எங்களை தங்க வைத்தாள் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து மருத்துவ குழுவினரிடம் பேசியபோது. கோவத்தகுடி கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்தில் 52 பேருக்கு கோரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது உண்மைதான் என்றனர். மேலும் கொரோனா பரிசோதனை அறிக்கை குறித்து மக்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தும் விதமாக தவறான வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தனர்.
இந்த கொரோனா அறிக்கை குறித்த தகவல் கோவத்தகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு தீ போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.