திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், திருச்சி மாநகர பொது மக்கள் இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழாவினை சிறப்பாகவும், பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள், அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி, 24ம்-ந்தேதி முதல் திருச்சி மாநகரில் உள்ள ஒரு சர்வதேச விமானநிலையம், ஒரு ரயில்வே சந்திப்பு, 6 ரயில்நிலையங்கள், 02 பேருந்து நிலையங்கள், 10 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களை கண்காணிக்கவும், வாகன தணிக்கை செய்ய 24 முக்கிய இடங்கள், 9 சோதனை சாவடிகள் ஆகியவை முக்கிய இடங்களில் வாகன தணிக்கை மற்றும் சந்தேக நபர்களை தணிக்கை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்ப மற்றும் செயலிழப்பு பிரிவை (BDDS) சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகரணங்களுடன் முக்கிய இடங்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாகன தணிக்கையின் போது சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களை விசாரணை செய்து உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், மாநகரில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவைகளில் வெளியாட்கள் யாரும் சந்தேகம் படும்படியாக தங்கியுள்ளார்களா என தீவிரமாக சோதனை மேற்கொள்ளவும், குடியரசு தினத்தன்று சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்கவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம் சார்பில் குடியரசு தின விழா கொண்டப்படும் இடமான திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாநகரில் 74வது குடியரசு தினத்தன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம், கூடுதல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, 7 சரக காவல் உதவி ஆணையர்கள், 40 காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் என திருச்சி மாநகரத்தில் சுமார் 950 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இன்று மாலை முதல் ஈடுப்படுத்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..