திருச்சி தூய வளனார் கல்லூரியின் 179-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியகாராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதிலும், சமூக நிதியை உறுதி செய்வதிலும் கல்வியே முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான், தமிழக அரசும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்றுகிறது. அரசில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகளும் கல்வியை முக்கியக் கருவியாக கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவதில் முனைப்புடன் பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 6 சதவீதம் பேர் மட்டும்தான் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பாரம்பரியமிக்க கல்வி நிறுவனங்கள் 15 சதவீதம் தமிழகத்தில்தான் இடம்பெற்றுள்ளன. தமிழக மக்கள் தங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள். அதனால்தான் இது சாத்தியமானது. நமது பண்டைய வரலாறு, கலாசாரம், பண்பாடு, இட வசதி உள்ளிட்டவற்றால் பல ஆண்டுகளாக தமிழகம் அறிவின் மையமாகவே விளங்கி வருகிறது.
மகத்தான அறிவைக் கொண்டு வந்த உலகெங்கிலும் உள்ள அறிஞர்களை தமிழகம் வரவேற்றது. கடந்த காலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் மருத்துவ மிஷன்கள் பல கல்வி நிறுவனங்களை நிறுவியுள்ளன. அவை, இப்போது சிறந்த மையமாக செயல்படுகின்றன.
கல்வி நிறுவனங்களில்தான் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர் என்ற பாகுபாடு பின்பற்றுவதில்லை. எந்த மதத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் அனைத்து மதத்தவர்களும் கல்வி பயிலும் நிலையை தமிழகத்தில் பார்க்க முடியும். ஆலயங்களைவிட கல்விச் சாலைகளே அவசியம் என்ற வகையில் கல்வி நிறுவனங்களை தொடங்கிய பிறகுதான் தேவலாயம் கட்டப்பட்டதற்கான சான்று திருச்சியில் இருப்பதை அனைவரும் அறியலாம். சமூக நீதியை நிலை நிறுத்துதில் கல்வியே மிகச் சிறந்த ஆயுதம். இந்த வகையில் தமிழக அரசும், மொழி, இன, மத, பாலின பாகுபாடு கூடாது என பணியாற்றி வருகிறது. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்..
இந்த விழாவில், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் இன்னாசிமுத்துவுக்கு, உயிரியலில் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதை பாராட்டி தூய வளனார் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இன்னாசிமுத்துவுக்கு நிதியமைச்சர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் மாநில தகவல் அதிகாரி சீனிவாச ராகவன், கல்லூரியின் அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ, செயலர் அமல், கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி, சேவியர் உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..