தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி இன்று மாலை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து எதிரும் புதிருமான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பழிவாங்கும் அரசியல், கேவலமான அரசியல், பிளாக் மெயில் செய்யும் அரசியல் என்பது பா.ஜ.க வந்த பிறகு அண்ணாமலை வந்த பிறகு தான் நடக்கிறது. தியாகராஜன் பண்பான குடும்பத்தில் பிறந்தவர் அவரை மையப்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தவறான குற்றச்சாட்டை வைப்பது கேவலமானது.கொள்கைரீதியாக விமர்சிக்கலாம். அரசாங்கத்தையும் அதன் நடைமுறையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் அண்ணாமலை செய்வது போல் ஒரு செயலை செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த கலாச்சாரத்தை காங்கிரஸ் கட்சி வெறுக்கிறது. அண்ணாமலை பேராண்மையோடு அரசியல் செய்ய வேண்டும். அவருடைய கொள்கையை கூறி அவரின் கட்சியை வளர்க்க வேண்டும். பிறர்மீது பழி கூறி, சேற்றை வாரி இரைக்க கூடாது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ராகுல் காந்தியின் நேர்மறையான அரசியல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது.அங்கு ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கும், கார்கேவின் பிரச்சாரத்திற்கும் மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். இது ஒரு நல்ல அறிகுறி.கர்நாடக தேர்தல் கர்நாடகத்திற்கு மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலுக்கே கட்டியம் கூறும் வகையில் இருக்கும்.இந்திய ஜனநாயகம் மிகவும் வலிமையானது. அவதூறுகளை கூறி அதை முடக்க முடியாது. ராகுல் காந்திக்கு எதிராக போடப்பட்ட வழக்கும் சரி, கார்கேக்கு எதிராக பா.ஜ.க வினர் கூறும் குற்றச்சாட்டும் சரி இந்திய ஜனநாயகத்தில் ஏற்று கொள்ள முடியாதது, மக்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். கார்கேவின் பரப்புரையையும் ராகுல் காந்தியின் பரப்புரையையும் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்கிற அச்சத்தால் பாஜகவினர் இதுபோல் பேசுகிறார்கள் இதுவே நமக்கொரு வெற்றி. இந்திய ஜனநாயகம் ஒரு பொழுதும் இது போன்ற அவதுறுகளை அனுமதிக்காது, அவர்களின் குற்றச்சாட்டுகளை தகர்தெரியும்.
கலைஞருக்கு நினைவு சின்னம் எழுப்புவது எப்படி தவறாகும். மராட்டியத்தில் சிவாஜிக்கு கடலுக்கு நடுவே சிலை வைக்கிறார்கள் அதை நாம் வரவேற்கிறோம். அதே போல தமிழ்நாட்டில் எளிமையான குடும்பத்தில் பிறந்து மிகவும் உயர்ந்த இடத்தை அடைந்த கலைஞருக்கு நினைவு சின்னம் அமைக்க உள்ளார்கள் அதில் எந்த தவறும் இல்லை. கடலுக்கடியில் பொருட்காட்சியே நடத்துகிறார்கள். அதற்கு அனுமதி தருகிறார்கள். மறைந்த தலைவரை எல்லோரும் சேர்ந்து மதிக்க வேண்டும். மக்கள் அவரை ஏற்றுக்கொண்டதால் தான் ஐந்து முறை முதலமைச்சரானார். அவருக்கு நினைவு சின்னம் வைப்பது தமிழர்களுக்கான பெருமை. கர்நாடகாவில் தமிழ் தாய் வாழ்த்து மதிக்கப்படாமல் இருந்த போது அண்ணாமலை வாய் மூடி மெளனியாக இருந்தார். அதை கூட செய்யாதவர் நாங்கள் அதிக வாக்கு வாங்கி வெற்றி பெறுவோம் என கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது.பா.ஜ.க வுடன் போர் செய்யும் அளவிற்கு எடப்பாடி தைரியமானவர் கிடையாது. அவர்களுக்குள் பனிப்போரும் நடக்காது, வெயில் போரும் நடக்காது. பா.ஜ.க விற்கு கட்டுப்பட்டு தான் எடப்பாடி இருப்பார். தொடர்ந்து தோல்வி அடைவார், அந்த கூட்டணியை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்