1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வழங்காமல் மறுத்துள்ளார். அதனை கண்டித்து இந்தியா முழுவதும் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டும் எவ்வித காரணமுமின்றி பணியிலிருந்து நீக்கப்பட்டும் இருந்துள்ளனர். அவர்களுடைய தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8 ஆம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று திருச்சி ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் வீரவணக்க நாள் கூட்டத்தை நடத்தினர். அந்த சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது போராட்டத்தில் பாதிக்கப்பட்டு தியாகம் செய்தவர்களுக்கு முழக்கங்கள் மூலம் வீரவணக்கம் செலுத்தினர்.
தற்பொழுதும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளும் இருந்து வருகிறது. தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லையென்றால் 1974 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் போல் மீண்டும் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.