திருச்சி பீமநகர் 51 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழகொசத் தெரு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், பொன்மலை கோட்டத்தலைவர் துர்கா தேவி, 51 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது மாநகராட்சி மேயர் அன்பழகன் கீழ கொசு தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதி சேர்ந்த பெண்கள் திடீரென மாநகராட்சி மேயர் அன்பழகனை முற்றுகையிட்டு தற்போது போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
அந்த புகாரில் முறையாக பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை எனவும், இந்த பாதாள சாக்கடை அமைத்ததின் மூலம் கழிவுநீர் தங்கள் வீடுகளில் தேங்கி நிற்பதாகவும், தெருக்களில் உள்ள குடிநீர் தொட்டியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாகவும், மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கழிவுகளை சரியாக அள்ளுவதில்லை எனவும், புகார் கூறினர்.
குறிப்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்கு 5000 ரூபாய் பணம் வாங்கியதாக மாநகராட்சி மேயரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட மாநகராட்சி மேயர் அன்பழகன் அருகில் இருந்த மாநகராட்சி அதிகாரிகளையும் மற்றும் கவுன்சிலர் கலைச்செல்வியின் கணவர் கருப்பையா ஆகியோரை பார்த்து இது போன்ற மக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யுங்கள்
மேலும் பொதுமக்களிடம் பாதாள சாக்கடை பணிக்காக வாங்கிய ரூபாய் 5000 பணத்தை திருப்பி செலுத்துங்கள் என்று கூறி பொதுமக்கள் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகளிடமும், கவுன்சிலர் கலைச்செல்வியின் கணவர் கருப்பையா ஆகியோருக்கு டோஸ் விட்டு சென்றார்.