திருச்சி சுப்பிரமணியபுரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.:-
திருச்சியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகிறேன். மேலும் எனது கணவர் கூலித் தொழிலாளி இந்நிலையில் எனது குடும்ப வறுமை காரணமாக கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்யாத காரணத்தால் ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற முடியும் என அறிந்தேன். எனவே I LOAN, Swift seconds, candy cash last money பெயர் கொண்ட ஆன்லைன் செயலிகளில் கடந்த 26-ம் தேதி ரூபாய் 7000 கடன் பெற்றேன். பெற்ற கடனுக்கு தவணை மற்றும் முழுத் தொகையினை கடந்த 2-ம் தேதியன்று கூகுள் பே மூலம் செலுத்தினேன். இருந்த போதும் கடனாக பெற்ற தொகை திரும்ப செலுத்தவில்லை என அவர்கள் குறிப்பிட்ட ஆன்லைன் செயலி நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டினர்.
ஆனால் நான் ஏற்கனவே பணம் செலுத்தி விட்டதாக கூறினேன். அதற்கு மறுமுனையில் பேசிய நபர் பணம் செலுத்தியதற்கான நகலை அனுப்ப சொல்லி பேசினார். பணம் செலுத்திய நகலை அனுப்பிய நிலையில் எனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனாகப்பெறப்பட்ட தொகையை திரும்ப செலுத்தவில்லை என்றால் இந்த புகைப்படத்தினை எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து whatsapp குழுக்களில் அனுப்பினர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே காவல்துறையினர் இதுபோன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.