காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார்.
அதன் ஒரு பகுதியாக அண்ணல் காந்தியடிகளின் 155-வது பிறந்த முன்னிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சிறுகனூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்புப் பார்வையாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பணம் ரூபாய் 1000 தகுதி இருக்கும் தங்களுக்கு வரவில்லை எனவும் அதேபோல் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது, பள்ளி செல்லும் குழந்தைகள் வேலைக்கு செல்வோர் மருத்துவமனைக்கு செல்வோருக்கு போதிய சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட குறைகளை கூறி மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிட்டதால் கிராம சபைக் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர் கூறுகையில்:- மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் கதிரவன் இவர் சரியாக தொகுதி பக்கம் வருவதில்லை அப்படியே வந்தாலும் திருமணம், காதுகுத்து திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கு பெறுகிறார்.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்பது இல்லை … அப்படி தொகுதி பக்கம் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அதனை நிறைவேற்றி கொடுத்திருந்தால் இப்படி கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எங்கள் குறைகளை கூறி இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.