இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2024 ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வெள்ளிகிழமை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 22,63,169 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டார். இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியில் பங்கேற்கலாம். புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், தொகுதி மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துக்கும் அதற்கான படிவங்களை வழங்கி பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போர் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.அக்.27ஆம் தேதி தொடங்கி டிச.9ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நவ.4, 5, 18,19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்களிலும் பொதுமக்கள் படிவங்களை வழங்கி திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள்- 10,98,759 பெண்கள்- 11,64,081 மூன்றாம் பாலினம்- 329 என மொத்தம் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் இந்தாண்டு கடந்த ஜனவரி 5ஆம் தேதி வரை மொத்தம் 2544 வாக்குப்பதிவு மையங்கள் இருந்தது.இன்றைய நிலவரப்படி 2547 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது என்று கூறினார்.