தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜேக் திருச்சி மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வர்ட்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளரும், டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நீலகண்டன் தொடங்கி வைத்து கோரிக்கை பேருரை ஆற்றினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் கோரிக்கைகளாக:- தொடக்க கல்வித்துறையில் பணிபுரியக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
கடந்த 12 10 2023 பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக் கொண்டு காணொளி மற்றும் அச்சு ஊடகங்களுக்கு தெரிவித்த இ எம் ஐ எஸ் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட டிட்டோஜேக் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.