தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், NSK விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், ஆழிவேந்தன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி உள் அரங்கில் நடைபெற்றது.
இதில் 28 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஸ்டைல், ஆற்றல் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி பரிசுகள் வழங்கப்பட்டது.மழலையர், மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களது ஆற்றல்மிகு சிலம்பத் திறனை சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர், வீராங்கணைகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர், முன்னால அரசு கொறடா மனோகரன், சுவாமி அறம்மிகு அடிகளார் மற்றும் காவல்துறை அதிகாரி கிரிஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.